Saturday, 1 September 2007

டி.வி.எஸ் பிளேம்: 'தீ'.வி.எஸ்!

எந்த நேரத்தில் 'பிளேம்' என்று பெயர் வைத்தார்களோ, டி.வி.எஸ்-ஸின் புதிய 125 சிசி பிளேம் மோட்டார் சைக்கிள் சந்தைக்கு வருவதற்கு முன்பே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது.

பார்த்தவுடனேயே, 'அழகிய தீயே' என்று சொல்ல வைக்கும் ஸ்டைலுடன் டி.வி.எஸ் வடிவமைத்திருக்கும் இந்த மாடலுடன் இன்னும் ஆறு படைப்புகளை டி.வி.எஸ் ஒரே நாளில் அறிமுகம் செய்திருந்தாலும் பஜாஜா நிறுவனத்தின் காப்புரிமை மீறல் குற்றச்சாட்டின் காரணமாக இந்த பிளேமின் பெயர்தான் தலைப்புச் செய்திகளில் பரபரப்பாக இடம் பெற்றது.

ஆனால் பஜாஜ் நிறுவனம் இந்த பிளேம் பைக்கைப் பார்த்து பயப்படுவதில் தவறே இல்லை. காரணம், 125 சிசி பிரிவை அப்படியே வளைத்துப் போடும் உத்தேசத்துடன் கலக்கனான அம்சங்களுடன் களமிறக்கப்பட்டிருக்கிறது இந்த டி.வி.எஸ் பிளேம்.

ஏற்கெனவே சொன்னது போல பிளேமின் தோற்றப் பொலிவு அதற்கு மிகப்பெரிய பலம். இதன் இரட்டை வண்ண வடிவமைப்பு கண்களைக் கவரக்கூடியது. ஹெட்லாம்ப், ரியர் வியூ மிர்ரர், ஷாக் அப்ஸர்பர், என்ஜின் கவுல் ஆகியவை அப்பாச்சி பைக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன.

டி.வி.எஸ். நிறுவனம், நவீன ரக ஜெட் போர் விமானங்களின் 'டெல்ட்டா' வடிவ இறக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பிளேம் வடிவமைத்திருப்பதாகக் கூறுகிறது. அதனால் பைக்கின் பல அம்சங்கள் 'டெல்ட்டா எட்ஜ்' எனப்படும் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஏற்கெனவே தனது சென்ட்ரா மாடலில் விடிஐ (வேரியபில் டைமிங் இன்ஜக்ஷன்) என்ஜின்களை வடிவமைத்துப் பொருத்தியிருக்கும் டி.வி.எஸ், இந்த பைக்கில் அதைவிட அருமையான சிசி-விடிஐ என்ஜினை வடிவமைத்து பொருத்தியிருக்கிறது. மூன்று வால்வுகளைக் கொண்ட, சிசி-விடிஐ (கன்ட்ரோல்டு கம்பஷன் வேரியபில் டைமிங் இன்டலிஜென்ட்) தொழில்நுட்பத்தில் இயங்கும் என்ஜின் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் மோட்டார் சைக்கிள் இந்த பிளேம்தான்.
ஆக, சந்தையில் 'சூட்டை'க் கிளப்ப வந்திருக்கும் இந்த பிளேம், 125 சிசி பிரிவில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.

(மோட்டார், செப்டம்பர் 2007)

No comments:

Post a Comment