Tuesday, 24 September 2013

இந்தியா டுடேவில் வெளிவந்த ஒரு கட்டுரை..
பெருகி வரும் பாலியல் குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கும் போக்கு பொதுச்சமூகத்தில் அதிகமாக இருக்கிறது. பெண் அணியும் உடை சரியில்லை; அவள் சென்ற நேரம் சரியில்லை; அவள் சென்ற இடம் சரியில்லை; என்று எல்லாவற்றையும் பெண்கள் மீது பழிபோட்டுவிடுவது தவறு செய்த ஆண்களை தப்பவிடுவதற்கு சமம்.

ஒரு பக்க நீதி - பெண்களின் பாதுகாப்பு குறித்த நீதிபதி கிருபாகரனின் கருத்து


வணக்கம்.

முதலில் ஒரு வேண்டுகோள். உங்கள் கட்டுரைக்கு மறுப்பு தெரிவிப்பதால் 'ஆணாதிக்கவாதி' என்ற முத்திரை குத்திவிட வேண்டாம்.

எனக்குத் தோன்றும் சில முரண்பாடுகளை இங்கு பட்டியலிடுகிறேன். முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.

1. பாலியல் குற்றங்கள் பெருகி வரவில்லை. பெண்களை ஒரு வஸ்துவாய் மனித குலம்  பாவிக்கத் தொடங்கியது முதல் - அதாவது ஆதி காலம் முதல் - பாலியல் குற்றங்கள் என்பது தொடர்கதையாகத்தான் உள்ளது. அவை குற்றங்கள் என இனங்காணப்படுவதும், அவற்றை வெளியுலகுக்குத் தெரியப்படுத்துவதும்தான் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

2. பாதிக்கப்பட்ட பெண்களும் குற்றம் நடைபெறுவதற்கு ஒரு காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக ஒருசில உண்மைகளைக் கூறினால், அதற்கு அந்த பெண்களைக் குற்றவாளிகள் என்று கூறுவதாக அர்த்தமா?
அப்படியென்றால் கட்டுக்கட்டாய் பணத்தை, பார்த்தாலே தெரிகிற மாதிரி பையில் எடுத்துக்கொண்டு, பேய்கூட உதவிக்கு வரமுடியாத நள்ளிரவில், அசட்டையாய் அலைவதில் தவறில்லையா? அந்த கோட்டை (விட்ட) சாமியை யாரும் ஒரு வார்த்தை கூட கேட்கக் கூடாதா?

(கற்பையும், பணத்தையும் ஒப்பிடுவதாக நினைக்க வேண்டாம். வேறு வழியில்லை, இந்த இரண்டுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் வேறு எதற்கும் இல்லை)

சுதந்திரத்துக்கும், பாதுகாப்பு உணர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சுதந்திரத்துக்கு முன்பு 'பெண்' என்ற வார்த்தையை சேர்த்துவிட்டால், பாதுகாப்பு உணர்வே தேவையில்லை என்று அர்த்தமில்லை.

எல்லோரும் இவ்வளவு படித்திருத்திருக்கிறீர்கள், உலகிலுள்ள எல்லா ஆண்களும் 100 சதவீதம் நல்லவர்களாக மாறுவது ஒருபோதும் சாத்தியமில்லை என்பது ஏன் யாருக்கும் புரியவில்லை.

ஆடை சுதந்திரம் ஒருபுறம் இருக்கட்டும், எல்லோரும் சுடிதார் அணிந்திருக்கும் கூட்டத்தில் ஒரே ஒரு பாவாடை தாவணிப்பெண் திரும்பிப் பார்க்க வைப்பதில்லையா?  இதுதான் கலாச்சாரம் என்ற மனதில் ஆழமாக வேரூன்றிய எண்ணங்களை க் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற வேண்டும், தாவணியிலிருந்து சுடிதாருக்கு மாறியது போல!

எனக்குத் தெரியும்.., பெண்கள் objects-ஆக பார்க்கப்படும்வரை அவர்கள் இழுத்துப் போர்த்திக்கொண்டு வீட்டுக்குள் இருந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லைதான்.

இருந்தாலும் 'இந்தப் பெண் சராசரிக்கும் அப்பாற்பட்டவள்' என்கிற எண்ணத்தை உண்டாக்கும் உடைகளுடன், தவறுகள் செய்வதற்கு தைரியம் கொடுக்கும் அரவமில்லாத இரவுகளில் பெண்கள் திரிவது, பசியிலிருக்கும் பூனைமுன் பால் கிண்ணத்தை வைத்துவிட்டு, பக்கத்தில் கூட நிற்காமல் சென்று விடுவதைப் போலத்தான்.

தினம் ஆயிரக்கணக்கானவர்கள் கடந்து செல்லும் பொதுவழியில், அமைதியாகப் படுத்திருக்கும் நாய் கூட, இரவு 11:30-க்கு மேல் (வாட்ச் வைத்திருக்குமோ?) பக்கத்துத் தெரு ஆள் போனால் கூட பாதுகாப்பான தூரத்துக்கு ஓடிப்போய் பயங்கரமாய்க் குலைக்கிறதே அது ஏன்?

பாதுகாப்பு உணர்வுதான்.

பாதுகாப்பாக இருப்பதிலும், இருக்கச் சொல்வதிலும் தவறே இல்லை. உலகின் எல்லா பூனைகளையும் சைவமாகச் சொல்லி கட்டளையிடுவதைவிட அது எவ்வளவோ மேல்.

எனது இந்தக் கருத்துக்கள் எடுபடும் என்ற நம்பிக்கையில் இவற்றை எழுதவில்லை. (நீதிபதி கிருபாகரனால் முடியாததா என்னால் முடிந்துவிடப் போகிறது) சும்மா ஒரு எழுத்து (தட்டெழுத்து?) பயிற்சிக்காகத்தான்!

நன்றி.
 


No comments:

Post a Comment