Monday, 1 June 2009

ஜெனரல் மோட்டார்ஸ்: அமெரிக்காவில் திவால் நிலை - இந்தியாவில் எதிரொலிக்குமா?

ஜெனரல் மோட்டார்ஸின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவில் அந்நிறுவனம் 'சாப்டர்-11'-க்காக பதிவு செய்யவிருக்கிறது. நம்மூரில் 'மஞ்சள் கடிதாசி' என்பார்களே, கிட்டத்தட்ட அதுபோலத்தான் இதுவும்.

நொடிக்கும் நிலையிலுள்ள ஒரு நிறுவனம் மூழ்கிவிடாமல் தப்பித்துக்கொள்ள கடைசி முயற்சியாக கடன்களையும், சொத்துக்களையும் முடிந்தவரை குறைத்து தொடர்ந்த செயல்படுவதற்குத் தேவையானவற்றை செய்வதுதான் 'சாப்டர்-11'.

தனது சொந்த நாடான அமெரிக்காவிலேயே இப்படியொரு நிலைக்கு வந்துவிட்ட ஜெனரல் மோட்டார்ஸ், இந்தியாவில் எப்படி செயல்படப்போகிறது என்பதுதான் இப்போது ஜி.எம். வாடிக்கையாளர்களின் கவலை.

இருந்தாலும், "இந்திய செயல்பாடுகளில் அமெரிக்க ஜி.எம்-மின் திவால் நிலை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 'சாப்டர்-11' என்பது ஜெனரல் மோட்டார்ஸின் அமெரிக்க நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்துமே தவிர, ஜி.எம். பிராண்டை அது பலவீனப்படுத்தாது. அமெரிக்காவைப் பொருத்தவரை இதனால் ஜி.எம். மேலும் பலமடையத்தான் செய்யும்" என்கிறார் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் துணைத் தலைவர் (கார்ப்பரேட் விவகாரம்) பி. பாலேந்திரன்.

தங்களது இந்திய திட்டங்களுக்கான முதலீடுகள் எதுவும் குறைக்கப்படப்போவதில்லை என்று கூறும் ஜெனரல் மோட்டார்ஸ், இந்திய சந்தை, வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள், டீலர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு தாங்கள் அளித்துள்ள வாக்குறுதியிலிருந்து சற்றும் பின்வாங்கப்போவதில்லை என்று உறுதியாகக் கூறுகிறது.

மேலும், மூன்று வருட சர்வீஸ் போன்ற தங்களது அனைத்து திட்டங்களும் தொடரும் என்று உறுதியளித்திருப்பதுடன், 2009-ல் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

"கடந்த சில வருடங்களாக எங்களுடைய இந்திய வர்த்தகம் லாபத்தை ஈட்டி வருவதால், அது சுயசார்புடைதாகத் திகழ்கிறது. அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸின் நொடிப்பு நிலைக்கும், இந்திய வர்த்தகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை" என்கிறார் ஜி.எம் இந்தியாவின் தலைவர் கார்ல் ஸ்லைம்.

நிறுவனத்தின் தரப்பில் இப்படியெல்லாம் கூறப்பட்டாலும், நிலவரம் வேறுமாதிரி இருக்கிறது என்கிறார்கள் ஜி.எம்-மின் டீலர்கள். "ஜி.எம். பிராண்ட் மீது வாடிக்கையாளர்கள் நம்பிக்கை முன்பு மாதிரி இல்லை. எங்கள் ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை முன்புபோல் இல்லை. அவர்களிடம் கார்களை விற்பனை செய்ய படாத பாடு பட வேண்டியிருக்கிறது" என்கிறார் ஒரு ஜி.எம். டீலர்.

முடிவாக ஆட்டோமொபைல் சந்தை ஆய்வாளர்கள் கூறுவது இதுதான்: "நிறுவனத்தின் அமெரிக்க நிலைமையால் இந்திய விற்பனையில் நிச்சயம் பாதிப்பு இருக்கும் என்றாலும், அது அவ்வளவு தீவிரமாக இருக்காது. பிரச்னையை ஜி.எம் எவ்வளவு விரைவாகவும், சுமுகமாகவும் தீர்க்கப்போகிறது என்பதைப் பொருத்துதான் பாதிப்பின் தீவிரம் இருக்கும்"
- மோட்டார், ஜூன் 2009